யாழ்ப்பாணம் முற்றவெளியில் இம்மாதம் 24, 25, 26 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறவுள்ள 'சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2020' இல் 'எங்கட புத்தகங்கள்' என்ற தலைப்பில் இந்த தேசத்து எழுத்தாளர்களின் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்த புத்தகக் கண்காட்சி விற்பனை நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
நூற்றுக்கணக்கான நூல்களின் - எல்லாமாக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகப் பிரதிகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்;ப்பாணத்தில் முதற் தடவையாக இலங்கை எழுத்தாளர்களினது இத்தகைய புத்தகக் கண்காட்சி நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை நண்பர்கள் அமைப்பின் உதவியில், யாழ் வர்த்தக சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் இயற்கை வழி செயற்பாட்டாளராகிய குலசிங்கம் வசீகரன் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்றுள்ளார். .
வாசகர்களும் எழுத்தாளர்களும் அதிக அளவிலான புத்தகப் பரிமாறல்களில் ஈடுபடுவதற்கான அரிய வாய்ப்பு இந்தக் கண்காட்சி தருணத்தின் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எம்மவர்களின் புத்தகங்களைத் தேடிப் படிக்கவும், அவற்றைத் தம் வீட்டு நூலகங்களில் சேர்த்துப் பத்திரப்படுத்திக் கொள்வதற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று இந்த நிகழ்வின் பிரதம ஏற்பாட்டாளராகிய குலசிங்கம் வசீகரன் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்ற புத்தகங்களை வாசகர்களும் ஆர்வலர்களும் 10மூ விலைக் கழிவில் பெற்றுக்கொள்ள முடியும். எழுத்தாளர்கள் பலரும் ஒன்றிணைகின்ற அதேவேளை, எழுத்தாளர்களும் வாசகர்களும் சங்கமிக்கின்ற ஒரு தருணமாகவும் இந்தக் கண்காட்சியின் 24, 25, 26 ஆகிய வெள்ளி, சனி, ஞாயிறு தினங்கள் அமைந்திருக்கும் என்றும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன